‘தென்றல்’ தொலைக்காட்சி தொடரில் கதாநாயகன் தமிழுக்கு சாருவுடன் திருமணம் நிச்சயமானாலும் சூழ்நிலை காரணமாக தமிழுக்கு துளசியுடன் திருமணம் நடந்துவிடுகிறது. தமிழின் அம்மா அவர்களை ஏற்றுக் கொள்வதோ ஏற்காததோ வேறு விஷயம். ஆனால் தமிழின் அம்மாவோ தொடர்ந்து சாருவுடன் பேசுகிறாராம், ‘ உன்னை எப்படியாவது தமிழுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்’ என்று உறுதி தருகிறாராம். அதனால் அவர் துளசியை எதற்கெடுத்தாலும் திட்டுகிறாரம். கதையில் விறுவிறுப்பு ட்விஸ்ட் வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் யோசிக்கலாமா?
தொடர்களில் மாமியார் மருமகள் சண்டை இருக்க வேண்டும் அப்போது தான் தொடரில் விறுவிறுப்பு குறையாது என்ற எண்ணத்திலோ என்னவோ மருமகள் செய்வதையெல்லாம் குறை சொல்வது போன்ற மாமியார் பாத்திரங்களை ‘மாதவி’, ‘செல்வி’, ‘தென்றல்’ போன்ற தொடர்களில் புகுத்தி இருக்கிறார்களோ! மாமியார்கள் எப்படியெல்லாம் குறை கண்டுபிடிக்கலாம் என்றோ மருமகள்கள் எப்படியெல்லாம் எதிர்த்து பேசலாம் என்றோ சொல்லிக் கொடுப்பது போல ஆகிவிடக்கூடாது என்பதை தொடர் தயாரிப்பாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ளட்டும்.
மாதவி தொடரில் மாதவியும் மனோகரனும் காதலிக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மனோகரனுக்கும் அருணாவிற்கும் கல்யாணம் நடக்கிறது. ஆனால் மனோகரன் மாதவியையே நினைத்துக் கொண்டிருப்பதாகக் காரணம் காட்டி அருணா விவாகரத்து வாங்கு கிறாராம், அருணாவிடமிருந்து விவாகரத்து ஆன பிறகு மாதவி மனோகரனை கல்யாணம் செய்து கொள்ளப் போகும் போது அருணா மனோகரனை இன்னமும் காதலிப்பதாகவும் அதனால் மாதவி மனோகரனை திருமணம் செய்யக்கூடாது என தடுக்கப் போகிறார். அப்போது மணமேடை வரை வந்த மாதவி “அதுவரை தான் நாடகம் ஆடியதாக”ச் சொல்லி அருணா மனோகரனைக் கல்யாணம் செய்து கொள்ளட்டும் என்று சொல்கிறார். அப்படியே கல்யாணமும் நடக்கிறது. இது ஒரு மெகாத் தொடர் என்பதற்காக கதையை எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றி பார்ப்பவர்கள் காதில பூச்சுற்றுவது நியாயமா?