செவ்வாய், 20 நவம்பர், 2012

ஒளிபரப்பியதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதா?


சாலமன் பாப்பையா சன் தொலைக்காட்சியில் தினம் ஒரு திருக்குறளுக்கு விளக்கம் சொல்லியது ஓர் அரிய பணி என்பதை மறுக்க முடியாது. 

இப்போது சன் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுகளில் காலையில் திருக்குறள் கதைகள் ஒளிபரப்புகிறார்கள்.  ஆகா நல்ல விஷயமாச்சே என்று தொடர்ந்து பார்த்தால் அப்போதுதான் தெரிந்தது ஒளிபரப்பியதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறார்கள் என்று. ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி..' திருக்குறளுக்குய உதாரணமாக கல்கத்தாவில் பிரபலமாயிருந்த தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் வாழ்க்கை பற்றிய விவரங்களைக் கூறினார் சாலமன் பாப்பையா. இதையே மூன்று வாரங்களாகவா ஒளிபரப்புவது!

மற்ற சேனல்கள்தான் இது போல ஒளிபரப்பியதையே ஒளிபரப்புகிறார்கள் என்று பார்த்தால் சன் டீவியுமா? அப்படி திரும்ப ஒளிபரப்பினால் ‘மறு ஒளிபரப்பு என்றாவது அறிவிக்கட்டும்.. இனியாவது தொலைக்காட்சி பார்ப்பவர்களை இப்படி மறுஒளிபரப்புச் செய்து ஏமாற்றாமல் இருப்பார்களா?

வியாழன், 8 நவம்பர், 2012

தொலைக்காட்சித் தொடர் கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இருப்பதாகக் காண்பிக்கிறார்களே!


பிள்ளைநிலா தொடரில் தன் தங்கையை தகுதியில்லாத ஒருவன் காதலிப்பதா? என்று அவனை அடித்து கோவில் படிகளில் கீழே தள்ள அவன் இறந்து போகிறான். அவன் செல்வாக்கு மிக்கவன் என்ற காரணத்தினால் யாருமே அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுக்கிறார்கள் அதனால் அக்கொலைகாரன் தண்டனை பெறாமல் நடமாடுகிறான்.

முந்தானை முடிச்சு தொடரில் பிரேமா மருத்துவ மனையில் இருக்கும் கிருஷ்ணவேணியை கொன்றுவிடுகிறாள். சதா தன் அக்காவின் கணவனை விஷம் குடிக்கச்செய்து சாகடித்துவிடுகிறான்.  ஆனால் அவர்களை யாரும் சந்தேகப்படவும் இல்லை போலிஸும் கண்டுபிடிக்கவும் இல்லையாம்.

உதிரிப்பூக்கள் தொடரில் சிவநேசன் செய்யாத கொலையை அவன்தான் செய்ததாக தெட்சிணாமூர்த்தி காவல்துறையிடம் சொல்லி அவர்கள் சிவநேசனை தேடுவதாகவும் அதனால் சிவநேசன் தெட்சிணாமூர்த்தியின் 3 குழந்தைகளையும் கடத்திச் சென்றுவிடுவதாகவும் கதை. பல வருடங்கள் ஆகியும்  அக்கொலையின் உண்மையான குற்றவாளி யார் என்று காவல்துறை கண்டுபிடிக்கவில்லையாம்.    .

திருமதி செல்வம் கதையில் காவ்யாவின் கணவன் செர்ரி காவ்யாவின் தங்கை பிரியாரையும் அவனது அலுவலக மேனேஜரையும் கொலை செய்துவிடுகிறான். ஆனால் காவல்துறையினர் அவனைப் பிடிக்கவில்லை. காவ்யாவே தன் கணவனைக் கொலைகாரன் என்று காவல்துறையினரிடம் நிரூபித்து அவனுக்கு தண்டனை வாங்கித் தருகிறாளாம்.

தங்கம் தொடரில் கங்காவின் தாய் சுப்புலட்சுமி தன் மகளுக்குத் திருமணம் செய்ய நிச்சயித்திருந்த மாப்பிள்ளையை (அவன் தன் மகளைக் கெடுத்து விட்டான் என்ற காரணத்திற்காக) சூலாயுதத்தால் குத்திவிடுகிறாளாம், சுப்புலட்சுமியும் ஜெயிலில்தான் இருக்கிறாளாம். ஆனாலும் அவள்தான் குற்றவாளி என்று காவல்துறையினருக்குத் தெரியாதாம்.

செல்லமே தொடரில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் கடற்கரையை ஸ்நேகா கொன்றுவிடுகிறாள். ஆனால் யாருக்குமே அவள்மீது சந்தேகம் வராததால் கொலைக் குற்றத்திலிருந்து தப்பிவிடுகிறாள். கடற்கரை வீட்டில் அவரது மனைவி முத்தரசியுடனேயே இருக்கிறாள் என்று காண்பிப்பதுதான் வேடிக்கை. வடமலை தன்னைத் தாக்கவந்தவனை கீழே தள்ளிவிட அவன் வைத்திருந்த கல்லே அவன் தலையில் விழுந்து இறந்துவிடுகிறான். போலிஸ் அதிகாரியான சிவரஞ்சனி வடமலைதான் அவனைக்கொன்றதாக்க் கூறுகிறாள். ஆனால் வடமலைமீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுகிறாளாம்.

நாதஸ்வரம் தொடரில் பாண்டியை அவனது முதலாளியே கொன்று பாண்டி தற்கொலை செய்து கொண்டதாக ஊரை எமாற்றிவிடுகிறானாம். அவன்தான் பாண்டியைக் கொன்றவன் என்று தெரியவரும்போது அவனே விபத்தில் இறந்துவிடுகிறான் என்று முடிந்துவிடுகிறது.

ஒரு சில வழக்குகள் தவிர பெரும்பாலான கொலை வழக்குகளில் குற்றவாளிகளை வெகு திறமையாக நம் காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவதாகவே செய்திகள் சொல்கின்றன. ஆனால் இந்த தொலைக்காட்சித் தொடர்களில் எந்த கொலை வழக்கிலும் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இருப்பதாகக் காண்பிப்பது எப்படி?