ஞாயிறு, 18 டிசம்பர், 2011

இறந்தவர் பிழைத்து வந்துவிட்டார்!

கதாநாயகனையே இறந்ததாகக் கூறினால் யார்தான் நம்புவார்கள்’ என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். நான் எழுதியதைப் போலவே இரண்டு மூன்று நாட்களிலேயே அந்தக் கதாநாயகன் செல்வம் ஆந்திர மாநில கடற்கரையோரம் நினைவில்லாமல் கிடந்தார் என்றும் கிராம மக்கள் அவரைக் காப்பாற்றிவிட்டார்கள் என்றும் காண்பித்தார்கள்.

வில்லனாகக் கருதப்பட்டவரே (செல்வம் ஏதோ ஒரு நேரத்தில் அந்த சேட்டுக்கு செய்த உதவிக்காக) செல்வத்தைக் காப்பாற்றி அவரது குடும்பத்தினரிடம் கொண்டுவந்து விட்டுவிடுகிறார் என்று கதையைத் திருப்பிவிட்டார்கள். (வில்லனே இப்படி தாமாகவே வந்து கதாநாயகனுக்கு உதவி செய்வதை இது போன்ற தொடர்களில் அல்லது சினிமாக்களில் தான் பார்க்க முடியும் என்பது இன்னொரு கதை)

இனியாவது இது போன்ற நம்பமுடியாத ட்விஸ்ட்களை (திருப்பங்களை) தொடர்களில் வராதமாதிரி திரைக்தையை அமைப்பார்களா தொடர் தாயாரிப்பாளர்கள்.

வெள்ளி, 9 டிசம்பர், 2011

கதாநாயகனையே இறந்ததாகக் கூறினால் யார்தான் நம்புவார்கள்

கிட்டதட்ட எல்லா

தொடர்களிலும் யாவது காணவில்லை என்று சொல்வதும் அவரைத்தேடுவதுமாக கதையை நீட்டிப்பதைப் பற்றி எழுதியிருந்தேன். சில தொடர்களில் இன்னும் மோசமாக இருக்கிறது.

மாதவி என்ற தொடரில் கதாநாயகி மாதவியையே காணவில்லை இறந்து விட்டார் என்று சொல்லி சில நாட்கள் சென்ற பிறகு அவர் சாகவில்லை என்று கதையை வளர்த்தார்கள். செல்லமே தொடரில் கதாநாயகனையே காணவில்லை என்று தேடி பிறகு கிடைத்து விட்டார் என்று கதையை வளைத்தார்கள். தங்கம் தொடரில் கதாநாயகன் செல்வ கண்ணனையே இறந்ததாகக் காண்பித்து பின்னர் உயிரோடு இருப்பதாகக் காண்பித்தார்கள்.

இப்போது திருமதி செல்வம் தொடரில் கதாநாயகன் செல்வத்தைக் காணவில்லை என்று தேடி அவர் இறந்துவிட்டார் என்று சொல்லி அவருக்குச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து முடித்துவிட்டார்கள். ஓரிரு நாட்களிலேயே அவர் ஆந்திரா கடற்கரையோரம் மயக்கத்தில் கிடந்தார் என்று சொல்லி கதையைத் திருப்பிவிட்டார்கள்.

ஒரு கதையில் கதாநாயகனை அல்லது கதாநாயகியை இறந்த்தாகச் சொல்வதை சிறு குழந்தைகூட நம்பாதே. அப்படியிருக்க கதாநாயக, நாயகியரை இறந்ததாக எப்படித்தான் கதையை அமைக் கிறார்களோ இந்த இயக்குனர்கள்?

சனி, 3 டிசம்பர், 2011

ஆட்டோக்களுக்கு சரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

ஆட்டோ கட்டணம்



தமிழக அரசு ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து பல வருடங்கள் ஆகின்றன. முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு பதினான்கு ரூபாய் என்றும் அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஆறு ரூபாய் என்றும் அரசு கட்டணத்தை நிர்ணயித்தது. ஆனால் அரசு நிரணயித்த அந்த கட்டணத்தை எந்த ஆட்டோக் காரரும் பின் பற்றவில்லை.. மீட்டர் போட்டு யாரும் ஓட்டவில்லை.

ஆனால் ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை ஏறிய போதும் எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் (டீசலில் ஓடும் ஆட்டோக்களாக இருந்தாலும்) கட்டணத்தை உயர்த்திக் கேட்டார்கள் அதிக கட்டணமே வாங்கி னார்கள். இதை முறைப்படுத்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பெட்ரோல் விலை இரண்டு முறை குறைக்கப்பட்டது. ஆனால் ஆட்டோ கட்டணம் மட்டும் குறைக்கப்படவில்லை ஏறியது ஏறியதுதான். இப் போது குறைந்தபட்ச கட்டணமாக முப்பது ரூபாய் கேட்கிறார்கள். ஒரு கிலோமீட்டருக்கு பதினைந்து ரூபாய், பதினாறு ரூபாய் அல்லது இருபது ரூபாய் என வாய்க்கு வந்ததை கட்டணமாகக் கேட் கிறார்கள். வாடகைக் காருக்கே கி்லோமீட்டருக்கு பத்து ரூபாய் தான் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதாவது ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த அரசு முன் வருமா? உடனடியாக ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்யவேணட்டும். எல்லா ஆட்டோக்களுக்கும மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். இதை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க முன்வருமா?,

வெள்ளி, 2 டிசம்பர், 2011

தொலைக்காட்சித் தொடரை நீட்டிக்க இப்படியும் ஒரு வழியா


நாதஸ்வரம் தொடரில் பாண்டியனையும் மகாவையும் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக இருவரையும் கண்டுபிடித்து விட்டார்கள்.  முந்தானை முடிச்சு தொடரில் காதலன் எங்கோ வேலைதேடிப் போய்விட அவனது நண்பனும் காதலியும் படாத பாடுபடுகிற போதுகூட அவன் வரவில்லையாம்.

அழகி தொடரில் மதியையும் அவளது காதலனையும் காணோம் என்று தேடி நல்லவேளையாக சீக்கிரமே கண்டுபிடித்து விட்டதாகக் காண்பித்துவிட்டார்கள். செல்லமே தொடரில் வடமலையைக் காணோம் என்று தேடினார்கள். இப்போது கதாநாயகி செல்லம்மா மட்டும் தேடிக்கொண்டிருக்கிறார். (தொடரைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியும்)
திருமதி செல்வம் தொடரில் செல்வத்தைக் காணவில்லை என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

பகல் நேர தொடரான இளவரசியில் இளவரசியின் கணவரைக் காணவில்லை என்று தேடுவதாகக் கதை செல்கிறது

ஒருவரைக் காணவில்லை  என்று தேடுவதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசும் மற்றவர்களும் அலைவதுமாக தொடரை நீட்டிக்க ஒரு வழி இருக்கும்  போது அவ்வழியை எந்த தொடரின் இயக்குனர்தான்  விட்டுவைப்பார். அதுதான் எல்லா தொடர்களிலும் தொடர்கிறது போல இருக்கிறது.

வெள்ளி, 18 நவம்பர், 2011

தொலைக்காட்சித் தொடரை நெடுந்தொடராக்க இதுதான் வழியா



சமீபத்தில் முடிவடைந்த தொலைக்காட்சித் தொடர் மாதவி. அந்தத் தொடரில் கதாநாயகி மாதவியே இறந்துவிட்டதாகக் கதை பின்னினார்கள். பிறகு இரண்டாம் கதாநாயகியான அருணா மலையிலிருந்து விழுந்து விட்டதாகவும் மலையடிவாரத்தில் பல இடங்களில் தேடியும் அவரோ அவரது உடலோ கிடைக்கவில்லை என்று சொல்லி கதையை வளர்த்தார்கள்.

அதேபோல தங்கபாண்டியன் இறந்து போனதாகச்சொல்லி சில நாட்கள் கழித்து அவர் இறக்கவில்லை என்று சொன்னார்கள். திரும்ப அருணாவைக் காணவில்லை என்று சொல்லி அவரது உடல் மருத்துவ மனையில் இருப்பதாகச் சொல்லி அவரது அம்மாவும் அப்பாவும் மருத்துவ மனைக்குச் செல்வதாகக் காண்பித்து பிறகு இறந்தது அருணா இல்லை என்று கதையை திருப்புகிறார்கள். 

?
ஒருவர் இறந்ததாகக்காண்பித்து அது கனவு என்றோ அல்லது அவர் இறக்கவில்லை என்றோ காண்பிப்பதும் சினிமாவுக்கோ தொலைக்காட்சித் தொடருக்கோ புதிது இல்லைதான். ஆனால் ஒரே கதையில்(ஒரே தொடரில்) இப்படி இவ்வளவு பேர் இறந்ததாகக் காண்பித்து பின்னர் அவர்கள் இறfக்கவில்லை என்று காண்பிப்பது எப்படி நியாயமாகும்?

திங்கள், 7 நவம்பர், 2011

சீரியல் தயாரிப்பாளர்கள் வித்தியாசமாக யோசிக்கமாட்டார்களா?


ஒருவருக்கு உடல் நலம் திடீரென மோசமானால் மருத்துவ மனையில் சேர்ப்பார்கள், மருத்துவர்கள் சிகிச்சைக்குப்பின் உடல் நலம் பெற்று வீட்டுக்குத் திரும்புவார்கள். இது தானே சாதாரணமாக வாழ்வில் நடக்கும். 
ஆனால் இந்த தமிழ் டீவி சீரியல்களில் நடப்பது என்ன?   ஒருவருக்கு உடல் நலன் மோசமானால் மருத்துவ மனையில் சேர்ப்பார்கள். அங்குள்ள மருத்துவர்கள் அவம்ரை பரிசோதித்துவிட்டு உடல்நலம் ரொம்ப மோசமாக இருக்கிறது,  இன்னும் 24 மணியோ அல்லது 36 மணியோ ஆனால்தான் சொல்லமுடியும் என்று சொல்வார்கள்.
.
அந்த கெடு முடியும் போது “”ஆபரேஷன் அல்லது ட்ரீட்மெண்ட் நல்லபடியாக முடிந்துவிட்டது. நன்கு குணமாகிவிட்டார்-- ஆனால் அவரிடம் எந்த அதிர்ச்சியான செய்தியையும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அவரது உயிருக்கேகூட ஆபத்தாகிவிடலாம்”” என்று ஒருவரை தனியாகக் கூப்பிட்டு டாக்டர் சொல்வார். அதனால் சொல்லவந்த முக்கியமான செய்தியை அவரிடம் சொல்வதை சொல்லாமல் தள்ளிப்போடுவார். அதனால் கதையை இன்னும் சில வாரத்திற்கு இழுக்கலாமே!

‘முந்தானை முடிச்சு’ ‘இதயம்’ போன்ற பல தொடர்களில் இப்படித்தான் திரைக்கதையை அமைத்திருந்தார்கள். இப்போது ‘பெண்டாட்டி தேவை’ தொரிலும் அதேகதைதான்.  இவர்கள் எப்போதுதான் வித்தியாசமாக யோசிக்கப்போகிறார்களோ?

திங்கள், 10 அக்டோபர், 2011

டீவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது டீவி பார்க்கும் ரசிகர்களுக்காகத் தானே

விஜய்  டீவியில் 'காபி வித் அனு' என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிக, நடிகையரின் பேட்டியை ஒளிபரப்பி வந்தார்கள். ஆனால் இப்போது அந்நிகழ்ச்சி காணாமல் போனது.

கலைஞர் டீவியில் ஒளிபரப்பாகி வந்த 'மானாட மயிலாட' நிகழ்ச்சிக்கும் இதே கதிதான், திடீரென நிறுத்தப்பட்டது.

பொதிகையில் வாரியார் அவர்களின் மாணவி தேச  மங்கையர்க்கரசி அருணகிரிநாதரின் ''முத்தைத்தரு பத்தித் திருநகை¸'' பாடலுக்கு ஒவ்வொரு சனிக் கிழமையும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

சன் டீவியில் ஓரிரண்டு நிகழ்ச்சிகளல்ல பல நிகழ்ச்சிகளுக்கு இது போன்ற முடிவு ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சில:  நிஜம், சங்கீத சங்கமம்  , அசத்தப்போவது யாரு, டீலா நோடீலா? 

தொலைக்காட்சி நிலையத்தார்  எந்த நிகழ்ச்சியை வேண்டுமானாலும் ஒளிபரப்பட்டும் எதை வேண்டுமானாலும் நிறுத்தட்டும் அது அவர்களது உரிமை என்று கூட அவர்கள் சொல்லலாம். அதற்குப் பல காரணங்கள் கூட இருக்கலாம்.. ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தும் போது அதற்கு பல வித விளம்பரங்கள் செய்யும் தொலைக்காட்சி நிலையத்தார்  ஒரு நிகழ்ச்சியை முடிக்கும் போது அல்லது நிறுத்தும் போது அதற்கான காரணத்தை ஏன் அறிவிக்கக்கூடாது. அவர்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது டீவி  பார்க்கும் ரசிகர்களுக்காகத்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட ரசிகர்கள் ஒரு நிகழ்ச்சி ஏன் நிறுத்தப்பட்டது என்று தெரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பது தவறா?   இனியாவது ரசிகர்களை மதித்து நடப்பார்களா?

வியாழன், 29 செப்டம்பர், 2011

தொலைக்காட்சி தொடர் இயக்குனர்கள் இப்படியா பூச்சுற்றுவது?


‘தென்றல்’ தொலைக்காட்சி தொடரில் கதாநாயகன் தமிழுக்கு சாருவுடன் திருமணம் நிச்சயமானாலும் சூழ்நிலை காரணமாக தமிழுக்கு துளசியுடன் திருமணம் நடந்துவிடுகிறது.  தமிழின் அம்மா அவர்களை ஏற்றுக் கொள்வதோ ஏற்காததோ  வேறு விஷயம்.  ஆனால் தமிழின் அம்மாவோ தொடர்ந்து சாருவுடன் பேசுகிறாராம், ‘ உன்னை எப்படியாவது தமிழுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்’ என்று உறுதி தருகிறாராம். அதனால் அவர் துளசியை எதற்கெடுத்தாலும் திட்டுகிறாரம். கதையில் விறுவிறுப்பு ட்விஸ்ட் வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் யோசிக்கலாமா?
தொடர்களில்  மாமியார் மருமகள் சண்டை இருக்க வேண்டும்      அப்போது தான் தொடரில் விறுவிறுப்பு குறையாது என்ற எண்ணத்திலோ என்னவோ மருமகள் செய்வதையெல்லாம் குறை சொல்வது போன்ற மாமியார் பாத்திரங்களை ‘மாதவி’, ‘செல்வி’, ‘தென்றல்’ போன்ற தொடர்களில் புகுத்தி இருக்கிறார்களோ!  மாமியார்கள் எப்படியெல்லாம் குறை கண்டுபிடிக்கலாம் என்றோ மருமகள்கள் எப்படியெல்லாம் எதிர்த்து பேசலாம் என்றோ  சொல்லிக் கொடுப்பது போல ஆகிவிடக்கூடாது என்பதை தொடர் தயாரிப்பாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ளட்டும்.
மாதவி தொடரில் மாதவியும் மனோகரனும் காதலிக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மனோகரனுக்கும் அருணாவிற்கும் கல்யாணம் நடக்கிறது. ஆனால்  மனோகரன் மாதவியையே நினைத்துக் கொண்டிருப்பதாகக்  காரணம் காட்டி அருணா விவாகரத்து வாங்கு கிறாராம், அருணாவிடமிருந்து விவாகரத்து ஆன பிறகு மாதவி மனோகரனை கல்யாணம் செய்து கொள்ளப் போகும் போது அருணா மனோகரனை இன்னமும் காதலிப்பதாகவும் அதனால் மாதவி மனோகரனை திருமணம் செய்யக்கூடாது என தடுக்கப் போகிறார். அப்போது மணமேடை வரை வந்த மாதவி “அதுவரை தான் நாடகம் ஆடியதாக”ச் சொல்லி அருணா மனோகரனைக் கல்யாணம் செய்து கொள்ளட்டும் என்று சொல்கிறார். அப்படியே கல்யாணமும் நடக்கிறது. இது ஒரு மெகாத் தொடர் என்பதற்காக கதையை  எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றி பார்ப்பவர்கள் காதில பூச்சுற்றுவது நியாயமா?
 

புதன், 21 செப்டம்பர், 2011

சீரியல் தயாரிப்பாளர்கள் என்னதான் சொல்கிறார்கள்?



‘முந்தானை முடிச்சு’ சீரியலில் முத்துவின் சித்தப்பா பழனியப்பன் முத்துவிடம் ‘’ நீ முதலாளி வேலையைச் செய்யாதே, மூட்டை தூக்கற வேலையை மட்டும் செய்’’ என்றுசொல்லி விடுகிறாராம்.  சித்தப்பா அப்படி திட்டிவிட்டதால் முத்து மனம் உடைந்து போய் மது அருந்து கிறார்.
‘’தென்றல்’’ தொலைகாட்சித் தொடரில் தமிழின் அண்ணனும் அண்ணியும் தமிழைத் திட்டுகிறார்கள் அதனால் மனம் வெறுத்துப் போன தமிழ் மது அருந்தப் போகிறார்.
‘செல்லமே’ தொலைகாட்சித் தொடரில் சுரேஷ் தன் அப்பா ஏ கே தொடர்ந்து கஷ்டப்படுவதைப் பார்க்க முடியாமல் மது அருந்து கிறார்.
‘திருமதி செல்வம்’ தொலைகாட்சித் தொடரில் செல்வத்தின் அப்பாவும், தம்பி வாசுவும் அவ்வப்போது மனகக்கஷ்டம் என்று மது அருந்துவதாகக் காட்டுகிறார்கள்.
ஆக யாருக்கவது மனக்கஷ்டம் என்றுவந்தால் அவர்கள் மது அருந்துவதைப் போலவே காட்சிகளை அமைக்கிறார்கள் தொடர் தயாரிப்பவர்கள். ஆகவே மனக்கஷ்டம் வருபவர்கள்  மது அருந்துவதுதான் ஒரே தீர்வு என்று சொல்கிறார்களா? இப்படிப் பட்ட காட்சிகளில் ‘’குடி குடியைக் கெடுக்கும்’’ என்று  காண்பித்துவிட்டால் போதுமா?
இனியாவது இப்படிப் பட்ட காட்சிகளைத் தவிர்ப்பார்களா அல்லது குறைந்த பட்சம் தவிர்க்க முயற்சியாவது செய்வார்களா?