வியாழன், 29 செப்டம்பர், 2011

தொலைக்காட்சி தொடர் இயக்குனர்கள் இப்படியா பூச்சுற்றுவது?


‘தென்றல்’ தொலைக்காட்சி தொடரில் கதாநாயகன் தமிழுக்கு சாருவுடன் திருமணம் நிச்சயமானாலும் சூழ்நிலை காரணமாக தமிழுக்கு துளசியுடன் திருமணம் நடந்துவிடுகிறது.  தமிழின் அம்மா அவர்களை ஏற்றுக் கொள்வதோ ஏற்காததோ  வேறு விஷயம்.  ஆனால் தமிழின் அம்மாவோ தொடர்ந்து சாருவுடன் பேசுகிறாராம், ‘ உன்னை எப்படியாவது தமிழுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்’ என்று உறுதி தருகிறாராம். அதனால் அவர் துளசியை எதற்கெடுத்தாலும் திட்டுகிறாரம். கதையில் விறுவிறுப்பு ட்விஸ்ட் வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் யோசிக்கலாமா?
தொடர்களில்  மாமியார் மருமகள் சண்டை இருக்க வேண்டும்      அப்போது தான் தொடரில் விறுவிறுப்பு குறையாது என்ற எண்ணத்திலோ என்னவோ மருமகள் செய்வதையெல்லாம் குறை சொல்வது போன்ற மாமியார் பாத்திரங்களை ‘மாதவி’, ‘செல்வி’, ‘தென்றல்’ போன்ற தொடர்களில் புகுத்தி இருக்கிறார்களோ!  மாமியார்கள் எப்படியெல்லாம் குறை கண்டுபிடிக்கலாம் என்றோ மருமகள்கள் எப்படியெல்லாம் எதிர்த்து பேசலாம் என்றோ  சொல்லிக் கொடுப்பது போல ஆகிவிடக்கூடாது என்பதை தொடர் தயாரிப்பாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ளட்டும்.
மாதவி தொடரில் மாதவியும் மனோகரனும் காதலிக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மனோகரனுக்கும் அருணாவிற்கும் கல்யாணம் நடக்கிறது. ஆனால்  மனோகரன் மாதவியையே நினைத்துக் கொண்டிருப்பதாகக்  காரணம் காட்டி அருணா விவாகரத்து வாங்கு கிறாராம், அருணாவிடமிருந்து விவாகரத்து ஆன பிறகு மாதவி மனோகரனை கல்யாணம் செய்து கொள்ளப் போகும் போது அருணா மனோகரனை இன்னமும் காதலிப்பதாகவும் அதனால் மாதவி மனோகரனை திருமணம் செய்யக்கூடாது என தடுக்கப் போகிறார். அப்போது மணமேடை வரை வந்த மாதவி “அதுவரை தான் நாடகம் ஆடியதாக”ச் சொல்லி அருணா மனோகரனைக் கல்யாணம் செய்து கொள்ளட்டும் என்று சொல்கிறார். அப்படியே கல்யாணமும் நடக்கிறது. இது ஒரு மெகாத் தொடர் என்பதற்காக கதையை  எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றி பார்ப்பவர்கள் காதில பூச்சுற்றுவது நியாயமா?
 

புதன், 21 செப்டம்பர், 2011

சீரியல் தயாரிப்பாளர்கள் என்னதான் சொல்கிறார்கள்?



‘முந்தானை முடிச்சு’ சீரியலில் முத்துவின் சித்தப்பா பழனியப்பன் முத்துவிடம் ‘’ நீ முதலாளி வேலையைச் செய்யாதே, மூட்டை தூக்கற வேலையை மட்டும் செய்’’ என்றுசொல்லி விடுகிறாராம்.  சித்தப்பா அப்படி திட்டிவிட்டதால் முத்து மனம் உடைந்து போய் மது அருந்து கிறார்.
‘’தென்றல்’’ தொலைகாட்சித் தொடரில் தமிழின் அண்ணனும் அண்ணியும் தமிழைத் திட்டுகிறார்கள் அதனால் மனம் வெறுத்துப் போன தமிழ் மது அருந்தப் போகிறார்.
‘செல்லமே’ தொலைகாட்சித் தொடரில் சுரேஷ் தன் அப்பா ஏ கே தொடர்ந்து கஷ்டப்படுவதைப் பார்க்க முடியாமல் மது அருந்து கிறார்.
‘திருமதி செல்வம்’ தொலைகாட்சித் தொடரில் செல்வத்தின் அப்பாவும், தம்பி வாசுவும் அவ்வப்போது மனகக்கஷ்டம் என்று மது அருந்துவதாகக் காட்டுகிறார்கள்.
ஆக யாருக்கவது மனக்கஷ்டம் என்றுவந்தால் அவர்கள் மது அருந்துவதைப் போலவே காட்சிகளை அமைக்கிறார்கள் தொடர் தயாரிப்பவர்கள். ஆகவே மனக்கஷ்டம் வருபவர்கள்  மது அருந்துவதுதான் ஒரே தீர்வு என்று சொல்கிறார்களா? இப்படிப் பட்ட காட்சிகளில் ‘’குடி குடியைக் கெடுக்கும்’’ என்று  காண்பித்துவிட்டால் போதுமா?
இனியாவது இப்படிப் பட்ட காட்சிகளைத் தவிர்ப்பார்களா அல்லது குறைந்த பட்சம் தவிர்க்க முயற்சியாவது செய்வார்களா?

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்


ஜெயா தொலைக்காட்சியில் கீழே உள்ளது போன்ற ஒரு அறிவிப்பு வெளி யிடப்பட்டது;-
தொழில்நுட்ப காரணங்களால் அறிவிக்கப் பட்ட நிகழ்ச்சிக்குப் பதிலாக பால்கே சாஹிப் விருது பெற்ற கே பாலச்சந்தர் அவர்களுடனான நேர்காணல் ஒளிபரப்பாகும்.
‘’பால்கே சாஹிப் விருது பெற்ற கே பாலச்சந்தர் அவர்களை கௌரவிக்கும் வகையில் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களுடனான நேர்காணல் ஒளிபரப்பாகும் ‘’ என்று அறிவித்திருந்தால் அவரை கௌரவித்ததாக இருந்திருக்கும்.  ‘’தொழில்நுட்ப காரணங்களால் அறிவிக்கப் பட்ட நிகழ்ச்சிக்குப் பதிலாக’’ இந்நிகழ்ச்சியை ஒளிபரிப்புவதாக அறிவித்தது வேறு வழியில்லாமல் ஒளிபரப்பியது போல் அல்லவா இருக்கிறது.  இனியாவது அறிவிப்புகளை கடனே என்று  போடாமல் யோசித்து சரியாக அறிவிக்க  கேட்டுக்கொள்கிறேன்
 
‘’கலர்ஸ் ‘’ என்ற தொலைக்காட்சியில் ‘’ இந்தியா ஹேஸ் காட் டேலன்ட்’’ என்றதொரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பல சுற்றுக்கள் முடிந்து கால் இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளதால் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் மிகவும் அருமையாக இருந்தன. குழுவினர் பாடிய பாடலாகட்டும், நடனமாகட்டும், ஆடலுடன் வந்த பஞ்சாபி பாடலாகட்டும், மற்ற பகுதிகளாகட்டும் அனைத்துமே மனதைக் கவர்வதாக அமைந்திருந்தன. இனி வரும் அரை இறுதி மற்றும் இறுதிச் சுற்றுக்களில் இனிமையாக அமையும் என்றதில் சந்தேகமேயில்லை. முடிந்தால் பார்க்கலாம்

சனி, 10 செப்டம்பர், 2011

எதையாவது எழுதுவோம்

புது பிளாக் ஒன்று துவங்க வேண்டும் என்பது  என் ரொம்ப நாள் ஆசை. என் ஆசையைப் பூர்த்தி செய்ய இதைத் தொடங்கி உள்ளேன். இதை ஆதரிப்பதும் ஆதரிக்காமல் போவதும் உங்கள் விருப்பம்..


பாமரனுக்கும் புரிவது போல மிக எளிமையாக திருக்குறள் இருந்தால் எப்படி இருக்கும் என பல நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தேன் அதன் பலன் கீழே:

"செய்யக்கூடாத வற்றை செய்வதால் கெடும் செய்ய
வேண்டியதை செய்யாதாலும் கெடும்"

'செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமை யாலும்  கெடும்' 
                                                                               --குறள்

சன் டீ.வி டைரக்ட் டு ஹோம்


சன் டீ.வி டைரக்ட் டு ஹோம்
சன் டீ.வி டைரக்ட் டு ஹோம் இணைப்பை வாங்கியதால் பிரச்சினையை விலைக்கு வாங்கி விட்டோமோ என்ற சந்தேகம் வருகிறது. காரணம் அதற்கு ரீசார்ஜ் செய்வதில் இருக்கும் சிரமம், ‘எல்லா சேனல்களிலும் படம் தெரியவில்லை கருப்பாக தெரிகிறது’ என்று புகார் செய்து அதனை சரி செய்வதில் இருக்கும் சிரமம் என எல்லாவற்றிலும் சிரமம் தான்.
முதலில் சன் டீவி யின் அலுவலருடன் பேச இணைப்பு கிடைப்பதே சிரமம் தான். நம் ஸ்மார்ட் கார்டு எண்ணை பதிவு செய்வதற்கு முன்னர் அவர்கள் ஸ்மார்ட் கார்டு எண்ணை பதிவு செய்தவுடன் அதை உறுதி செய்ய நேரம் போகும். உறுதி செய்த பிறகு நம் கணக்கின் விவரங்களை இயந்திரம் அறிவிக்கும் (அதுவும் நம் ஃபோன் காசில்). இவ்வளவக்கும் பிறகே அந்த அலுவலரின் இணைப்பைத் தருவதாக அறிவிப்பு வரும். ஆஹா அவரிடம் பேசப்போகிறோம் என்று நினைத்தால் அதுதான் இல்லை. அவரோ அல்லது அந்த அம்மாவோ பேசுவதற்குள் திரும்பவும் விளம்பரம் (அதே விளம்பர இடைவேளை இன்றி ஒளிபரப்பப்படும் சினிமா பற்றிய அறிவிப்பு – காதிலிருந்து இரத்தம் வரும் வரை திரும்ப திரும்ப திரும்ப ………. வந்து கொண்டே இருக்கும். இவ்வளவுக்கும் பிறகே அந்த இணைப்பு கிடைக்கும்

உங்கள் பெயர், உங்கள் விலாசம், நீங்கள் கஸ்டமரா, டீலரா. இணைப்பு உங்கள் பெயரில்தான் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டு விட்டு உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பார். இதற்குள் போதுமடா சாமி என்று தோன்றி விடும்.

இவ்வளவு கஷ்டத்திற்குப் பிறகு ‘எல்லா சேனல்களிலும் படம் தெரியவில்லை கருப்பாக தெரிகிறது’ என்று புகார் செய்தேன் பத்து நாட்களுக்கு முன். வயர்களை எடுத்து விட்டு  திரும்ப கனெக்ட் செய்யுங்கள் என்று கூறினார் பலன் ஏதும் இல்லை. 48 மணி நேரத்திற்குள் சரியாகும் என்று சொன்னார்.

இரண்டு நாட்களாகியும் இணைப்பு வரவில்லை என்று மேலே பட்ட அதே அவஸ்தைகளுக்குப் பிறகு ஒரு பெண் பேசினார் அவர் மெனுவில் போய் அதைச் செய்யுங்கள்   இதைச்செய்யுங்கள் என்று  கூறினார். பலன் எனனவோ பூஜ்யம்தான். 24 மணி நேரத்திற்குள் மெக்கானிக வருவார் அவர் சரி செய்வார் என்று சொனனார். அதற்குப் பிறகு மூன்று நாட்களாகியும் யாரும் வரவில்லை பிரச்சினை அப்படீயேதான் இருந்தது.

திரும்ப திரும்ப நினைவு படுத்த தொலைபேசியில் மேலே கூறிய அவஸ்தை களோடு கால் சார்ஜையும் வீணாக்கியும் பத்து நாள் வரை யாரும் வரவில்லை டீவி சேனல்களும்  தெரியவில்லை. எவ்வளவு முறை  நினைவு படுத்தினாலும் அதே பதில்கள், சமாதானங்கள். அந்த நாட்களுக்குக் கட்டிய பணமும் வே.ஸ்ட் ஃபோன் பேசிய காசும் வேஸ்ட். இதை யார் தருவார்கள்.


யாரும் வந்து சரிசெய்யாமலே தானாகவே சரியாகிவிட்டது என்பது வேறு விஷயம். சன் டீவி போன்ற பெரிய நிறுவனங்களில் இது போன்ற விஷயங் களை மேலிருப்பவர்களுக்குத் தெரிவிக்க ஒரு ஈ மெயில் ஐ டிகொடுத்தால் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் எத்தனையோ பிரச்சினைகள் உள்ள மேலதிகாரிகள் இதிலெல்லாம் கவனம் செலுத்துவார்களா? கவனம் செலுத்த நேரம்தான் அவர்களுக்கு இருக்கிறதா?