திங்கள், 31 டிசம்பர், 2012

செவ்வாய், 25 டிசம்பர், 2012

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஒளிபரப்பியதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதா?


சாலமன் பாப்பையா சன் தொலைக்காட்சியில் தினம் ஒரு திருக்குறளுக்கு விளக்கம் சொல்லியது ஓர் அரிய பணி என்பதை மறுக்க முடியாது. 

இப்போது சன் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுகளில் காலையில் திருக்குறள் கதைகள் ஒளிபரப்புகிறார்கள்.  ஆகா நல்ல விஷயமாச்சே என்று தொடர்ந்து பார்த்தால் அப்போதுதான் தெரிந்தது ஒளிபரப்பியதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறார்கள் என்று. ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி..' திருக்குறளுக்குய உதாரணமாக கல்கத்தாவில் பிரபலமாயிருந்த தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் வாழ்க்கை பற்றிய விவரங்களைக் கூறினார் சாலமன் பாப்பையா. இதையே மூன்று வாரங்களாகவா ஒளிபரப்புவது!

மற்ற சேனல்கள்தான் இது போல ஒளிபரப்பியதையே ஒளிபரப்புகிறார்கள் என்று பார்த்தால் சன் டீவியுமா? அப்படி திரும்ப ஒளிபரப்பினால் ‘மறு ஒளிபரப்பு என்றாவது அறிவிக்கட்டும்.. இனியாவது தொலைக்காட்சி பார்ப்பவர்களை இப்படி மறுஒளிபரப்புச் செய்து ஏமாற்றாமல் இருப்பார்களா?

வியாழன், 8 நவம்பர், 2012

தொலைக்காட்சித் தொடர் கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இருப்பதாகக் காண்பிக்கிறார்களே!


பிள்ளைநிலா தொடரில் தன் தங்கையை தகுதியில்லாத ஒருவன் காதலிப்பதா? என்று அவனை அடித்து கோவில் படிகளில் கீழே தள்ள அவன் இறந்து போகிறான். அவன் செல்வாக்கு மிக்கவன் என்ற காரணத்தினால் யாருமே அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுக்கிறார்கள் அதனால் அக்கொலைகாரன் தண்டனை பெறாமல் நடமாடுகிறான்.

முந்தானை முடிச்சு தொடரில் பிரேமா மருத்துவ மனையில் இருக்கும் கிருஷ்ணவேணியை கொன்றுவிடுகிறாள். சதா தன் அக்காவின் கணவனை விஷம் குடிக்கச்செய்து சாகடித்துவிடுகிறான்.  ஆனால் அவர்களை யாரும் சந்தேகப்படவும் இல்லை போலிஸும் கண்டுபிடிக்கவும் இல்லையாம்.

உதிரிப்பூக்கள் தொடரில் சிவநேசன் செய்யாத கொலையை அவன்தான் செய்ததாக தெட்சிணாமூர்த்தி காவல்துறையிடம் சொல்லி அவர்கள் சிவநேசனை தேடுவதாகவும் அதனால் சிவநேசன் தெட்சிணாமூர்த்தியின் 3 குழந்தைகளையும் கடத்திச் சென்றுவிடுவதாகவும் கதை. பல வருடங்கள் ஆகியும்  அக்கொலையின் உண்மையான குற்றவாளி யார் என்று காவல்துறை கண்டுபிடிக்கவில்லையாம்.    .

திருமதி செல்வம் கதையில் காவ்யாவின் கணவன் செர்ரி காவ்யாவின் தங்கை பிரியாரையும் அவனது அலுவலக மேனேஜரையும் கொலை செய்துவிடுகிறான். ஆனால் காவல்துறையினர் அவனைப் பிடிக்கவில்லை. காவ்யாவே தன் கணவனைக் கொலைகாரன் என்று காவல்துறையினரிடம் நிரூபித்து அவனுக்கு தண்டனை வாங்கித் தருகிறாளாம்.

தங்கம் தொடரில் கங்காவின் தாய் சுப்புலட்சுமி தன் மகளுக்குத் திருமணம் செய்ய நிச்சயித்திருந்த மாப்பிள்ளையை (அவன் தன் மகளைக் கெடுத்து விட்டான் என்ற காரணத்திற்காக) சூலாயுதத்தால் குத்திவிடுகிறாளாம், சுப்புலட்சுமியும் ஜெயிலில்தான் இருக்கிறாளாம். ஆனாலும் அவள்தான் குற்றவாளி என்று காவல்துறையினருக்குத் தெரியாதாம்.

செல்லமே தொடரில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் கடற்கரையை ஸ்நேகா கொன்றுவிடுகிறாள். ஆனால் யாருக்குமே அவள்மீது சந்தேகம் வராததால் கொலைக் குற்றத்திலிருந்து தப்பிவிடுகிறாள். கடற்கரை வீட்டில் அவரது மனைவி முத்தரசியுடனேயே இருக்கிறாள் என்று காண்பிப்பதுதான் வேடிக்கை. வடமலை தன்னைத் தாக்கவந்தவனை கீழே தள்ளிவிட அவன் வைத்திருந்த கல்லே அவன் தலையில் விழுந்து இறந்துவிடுகிறான். போலிஸ் அதிகாரியான சிவரஞ்சனி வடமலைதான் அவனைக்கொன்றதாக்க் கூறுகிறாள். ஆனால் வடமலைமீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுகிறாளாம்.

நாதஸ்வரம் தொடரில் பாண்டியை அவனது முதலாளியே கொன்று பாண்டி தற்கொலை செய்து கொண்டதாக ஊரை எமாற்றிவிடுகிறானாம். அவன்தான் பாண்டியைக் கொன்றவன் என்று தெரியவரும்போது அவனே விபத்தில் இறந்துவிடுகிறான் என்று முடிந்துவிடுகிறது.

ஒரு சில வழக்குகள் தவிர பெரும்பாலான கொலை வழக்குகளில் குற்றவாளிகளை வெகு திறமையாக நம் காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவதாகவே செய்திகள் சொல்கின்றன. ஆனால் இந்த தொலைக்காட்சித் தொடர்களில் எந்த கொலை வழக்கிலும் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இருப்பதாகக் காண்பிப்பது எப்படி? 

திங்கள், 1 அக்டோபர், 2012

தொடரை நீட்டிக்க நிறைய சம்பவங்கள் கிடைக்கும் என்பதற்காகவா ?


முந்தானை முடிச்சு தொடரில் மீனாவை வீட்டில் வேலைக்காரிபோல இருக்கச்சொல்லிவிட்டு அவளது கணவனுக்கு இன்னொரு கல்யாணம் செய்யப்போகிறார்களாம்.

உதிரிப்பூக்கள் தொடரில் தெட்சிணாமூர்த்தி இரண்டு மனைவிகளுடன் வாழ்வதாகவும் இது தெரிந்தவுடன் முதல் மனைவி அவரைவிட்டுப் பிரிந்து வாழவதாகவும் காண்பிக்கிறார்கள்.

திருமதி செல்வம் கதையில் செல்வம் அர்ச்சனாவுடன் வாழ விடமாட்டேன் அவனைப்பிரித்து கல்யாணம் செய்து காட்டுகிறேன் என்று நந்தினி சபதம் செய்து அதற்கான வேலைகளை செய்து வருகிறாளாம்.

தங்கம் தொடரில் ஐயா இரண்டு மனைவிகளுடனும், அவர்களுடைய குழந்தைகளுடனும் வாழ்வதே முக்கிய கதை.

தென்றல் நெடுந்தொடரில் டாக்டரையா முதல் மனைவியை விட்டுப் பிரிந்து இன்னொருத்தியுடன் வாழ்வதும் அவளைப்பிரிந்து முதல் மனைவியுடன் வாழ்வதுமாகக் கதை செல்கிறது.

செல்லமே தொடரிலும் வடமலை செல்லம்மாவை விட்டுவிட்டு இன்னொருத்தியை கல்யாணம் செய்து கொள்வதும் ஆனால் செல்லம்மாவின் குழந்தைகள் மட்டும் வேண்டும் என்று அதற்காகப் போராடுவதுமாகக் கதை

அழகியில் சோமு மனைவி மதியிருக்க அவளை விட்டுவிட்டு இன்னொருத்திக்கு வலைவீசுவதுமாக கதையை அமைத்திருக்கிறார்கள்.

நாதஸ்வரம் தொடரில் மகேஷின் கணவன் செல்வரங்கம் அவனது முதலாளியம்மாவுடன் பழகுவதாகவும் அவனது அக்காவே அவர்களைச் சேர்த்து வைத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் முதலில் சென்ற கதையில் ஒருவழியாக அவன் இப்போது மகேஷுடனேயே சேர்ந்து வாழ்வதாக கதையை மாற்றிவிட்டார்கள். இதற்காக டைரக்டரைப் பாராட்டலாம்,

இந்த போக்கிலிருந்து மாறுபட்டிருப்பது இப்போதைக்கு பிள்ளைநிலாவும், கார்த்திகைப் பெண்களும்தான்.

இப்படி கிட்டதட்ட எல்லா கதைகளிலுமே இரண்டு பெண்டாட்டிகள் என்று கதை, திரைக்கதையை அமைப்பதைப் பார்த்தால் ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்வார்கள் போலிருக்கிறதே! தொடரை நீட்டிக்க நிறைய சம்பவங்கள் கிடைக்கும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்களா?  

புதன், 23 மே, 2012

கதை நம்பும்படி இருக்க வேண்டாமா?


முந்தானை முடிச்சு தொடரில் மீனாவின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக ப்ரேமா ஒரு சி டி யைத்தேடிப் பிடித்து வாங்கிவர அது காணாமல் போய் ஒருவழியாக அது வீட்டுக்கு வந்து மீனாவின் கையில் கிடைத்துவிடுகிறது. ப்ரேமா சாமர்த்தியமாகப் பேசி மீனாவிடமிருந்து அதை வாங்கி மீனாவின் கண்முன்னாலேயே எரித்துவிடுகிறாளாம். மீனாவின் வருங்காலக் கணவன் “அந்த சிடியை ப்ரேமா எரிக்கவில்லை” என்று சொல்லி ப்ரேமாவின் பீரோவிலிருந்து அதை எடுத்துக் காண்பிக்கிறான். 
இந்த விசயத்தை கந்தசாமியிடம் சொல்ல அவர் ப்ரேமாவை தனியாக அழைத்து “ஏன் இப்படி செய்கிறாய்?” என்று கேட்க “அந்த சிடி கிடைத்துவிட்டது என்று தானே என்னை விரட்டுகிறீர்கள். அந்த கிடியின் நாலு காபி என்னிடம் இருக்கிறது”  என்று சொல்கிறாள். (அந்த நேரத்துக்குள் அவள் எங்கும் வெளியில் போகாமலே சிடி காபி எப்படி வந்தது??)

மீனாவின் கல்யாணத்தை நிறுத்தாமலிருக்க (சிடியைத்தர) கந்தசாமியின்   சொத்து முழுவதையும் 10 பைசா விடாமல் எழுதித் தரவேண்டுமென்று ப்ரேமா வற்புறுத்துகிறாளாம். ( ஒருவரால் சொத்து முழுவதையும் 10 பைசா விடாமல் எப்படி எழுதித் தர முடியும்?) அந்த நல்லவர் கந்தசாமி அப்படியே எழுதித்தருகிறாராம்!! பத்திரப் பதிவு அலுவலகத்திற்கே சென்று பதிவு செய்து தருகிறாராம் அதுவும் எப்படிப் பட்ட நேரத்தில் கல்யாணத்திற்காக எல்லோரும் மண்டபத்திற்கு செல்ல இருக்கும் நேரத்திற்குள். (ஏதாவது நம்பும் படியாக இருக்கிறதா?)

எல்லோரும் கல்யாண மண்டபத்திற்கு போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் மீனாவின் வருங்கால மாமியார் அவர்களுடைய சொந்தக் காரர்கள் மீனாவைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள் என்று சொல்லி அவர்களை மீனாவின் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வர அங்கு “சொத்துக்கள் முழுவதையும் கூட எழுதித் தருகிறோம்” என்று முத்து சொல்லும் சூழ் நிலை வருகிறதாம்.
 
மீனாவின் நலுங்கு நடந்த பிறகு கல்யாணம் நடப்பதற்கு முன் கந்தசாமியின் நண்பர் (இறந்துபோன) அண்ணாமலைக்கு கந்தசாமியின் மகன்களும் மருமகள்களும்  குளக்கரையில் காரியம் செய்கிறார்களாம். தொடர் பார்ப்பவர்களின் அனுதாபத்தைப் பெற / ஆர்வத்தைத் தூண்ட எப்படி வேண்டு மானாலும் திரைக்கதையை அமைக்கலாமா? நம்பும்படி இருக்க வேண்டாமா?? எல்லாமே நல்ல வேடிக்கைதான்

செவ்வாய், 22 மே, 2012

தொடர் தயாரிப்பாளர்கள். மக்களுக்குச் சொல்வதுதான் என்ன??


முந்தானை முடிச்சு தொடரில் மீனா ஒருவனை காதலித்து கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிடுகிறாள். திருமதி செல்வம் தொடரில் கதாநாயகி அர்ச்சனாவின் தங்கை ப்ரியா கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டதாகக் கதையை அமைத்திருந்தார்கள்.

‘’செல்லமே’ தொடரில் ஒரு பெண்ணை நான்கு பேர் கெடுத்துவிட அவள் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமானதாகவும் அவர்களுள் கர்ப்பத்திற்குக் காரணமானவனையே கல்யாணம் செய்து கொள்கிறாள்.என்றும் கதை தொடர்ந்தது.

உதிரிப்பூக்கள் தொடரில் திருமணமான தெட்சிணாமூர்த்தி இன்னொருத்தி யுடன் கல்யாணம் செய்து கொள்ளாமலே குழந்தையும் பெற்று குடும்பம் நடத்துவதாகக் கதையை அமைத்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் போதாதென்று சமீபத்தில் துவங்கிய ‘பிள்ளை நிலா’’ தொடரிலும் கோகிலா காதலித்து கல்யாணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாகி இருப்பதாகக் கதையைத் துவக்கியிருக்கிறார்கள்.

ஆக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பாதி தொடர்களில் இப்படி கல்யாணத்திற்கு முன்பாகவே கர்ப்பமாகிவிடுவதாகக் கதையை அமைத்திருக்கிறார்களே தொடர் தயாரிப்பாளர்கள். இவர்கள் மக்களுக்குச் சொல்வதுதான் என்ன??