திங்கள், 27 ஜனவரி, 2014

கதையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்




குடியரசுதின தமிழக அருசுவிழாவினை மழுமையாகக் காண்பித்தது ஜெயா டீவி. நடனங்கள் நடைபெற்றதைக் காண்பித்த போது (குறிப்பாக கோலாட்டம் பின்னல் நடனத்தின் போதும் அதற்கு முந்திய ட்ரம் நடனத்தின் போதும்) நடனத்தை விட்டுவிட்டு பார்வையாளர்களையும் சிலைகளையும் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.  எது முக்கியம் எது முக்கியமில்லை என்று கூட தெரியாதா படம்பிடிப்பவர்களுக்கு. 

சன் தொலைக்காட்சியின் முத்தாரம் நெடந்தொடரில் நடிகை தேவயானி இரு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று இவருக்குப் பதில் இவர் என்று வேறு ஒருவரை நடிக்க வைத்து விட்டார்கள். கொஞ்ச நாட்கள் கழித்து தீவிபத்தில் அவரது முகம் சிதைந்து போனது அதனால் அவரது முகத்தை மாற்ற வேண்டும் என்று சொல்லி வேறு ஒருவரை நடிக்க வைத்தார்கள். இப்பொழுது அந்த நெடுந்தொடரை நிறுத்தியேவிட்டார்கள்.  இவர்கள் நினைத்தால் ஆளை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் இல்லையெனில் கதையையே மாற்றிக்கொள்ள லாம் போலிருக்கிறது. தொடர் பார்ப்பவர்களைப் பற்றி யோசிப்பதே இல்லை இந்தத்தயாரிப்பாளர்கள்.
‘’மண்டைக்குள் மாவாட்ரீங்க மாவு’’ என்று கோபப்படுகின்ற பெண்ணிடம் ஒரு பிஸ்கட்டைக் கொடுத்து இதை சாப்பிடு என்று சொல்கிறான் நண்பன். ‘’ஏண்டா?’’ என்று அவள் கேட்க ‘’பசி வந்திட்டா நீ நீயா இருக்க மாட்டே’’ என்று சொல்கிறான் நண்பன். அதை சாப்பிட்ட உடன் அந்தப் பெண் ஒரு அமைதியான ஆணாக மாறிவிடுகிறாளாம்.   இப்படி ஒரு விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது. பெண்கள் இதைப் பார்த்துக்கொண்டு எப்படி பேசாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.  ஒருவன் பசிவந்துவிட்டால் அவன் அவனாக இருப்பதில்லை கோபக்காரனாக மாறிவிடுகிறான் என்று காண்பித்து விட்டு போகட்டும்.  கோபப்படும் ஒரு பெண்ணாக ஏன் காண்பிக்க வேண்டும். பெண்கள்தான் இப்படி கோபப்படுவார்கள் கோபத்தில் கண்ணாபிண்ணா வென்று பேசுவார்கள் என்று சொல்கிறார்களா இந்த விளம்ரம் தயாரித்தவர்கள்?

கதாநாயகனை அல்லது கதாநாயகி யையே இறந்து போனதாகக்காட்டி சில நாட்கள் அல்லது சில வாரங்களுக்குப் பிறகு அவர் உயிரோடு இருக்கிறார் என்று கதையைத் தொடர்வது பற்றி இதையெல்லாம் யார் நம்புவார்கள் என்று ஏற்கனவே எழுதியிருந்தேன். இப்பொழுது அதே பாணியில் வம்சம் தொடரின் கதாயாயகியான ரம்யாகிருஷ்ணன் இறந்து விட்டதாக கதைக்கிறார்கள்.  (அவர்தான் இத்தொடரின் தயாரிப்பாளர்கூட) இதை எப்படி பார்ப்பவர்கள் நம்புவார்கள் என இயக்குனர் நினைக்கிறார்? பூ சுற்றுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?
அழகிய மனைவி குளித்து லக்ஷ்மிகரமாக காபியை எடுத்துக் கொண்டு கணவனுக்கு தர அவனது அறைக்குச் செல்கிறாள், காபியை டீபாயில் வைத்துவிட்டு ஜன்னலைத் திறந்து விடுகிறாள். வெளிச்சம் கண்ணில்பட்டு கணவன் திரும்பிப் படுத்து தூக்கத்தைத் தொடர்கிறான். செல்ஃபோன் மணி ஒலிக்கிறது. கணவன் அதை எடுத்துப் பேச, ஃபோனில் அவனது மனைவியின் குறல் ‘’குட் மார்னிங்’’ என்று ஒலிக்க மகிழ்ச்சியில் திரும்பி மனைவியைப்  பார்க்கிறான்.  காலையில் மூன்று மணிநேரம் இலவசமாகப் பேசலாம் என்ற விளம்பரம் ஒரு கவிதைபோல படமாக்கி உள்ளனர். பாராட்டலாம்.


செவ்வாய், 21 ஜனவரி, 2014

ஐம்பெருங்காப்பியங்கள் கூட தெரியாத இளந்தலைமுறையினர்


 விஜய் டீவியின் ‘நீயா நானா வில் ஆங்கிலப்புத்தாண்டை எப்படி கொண்டாடினீர்கள் என்று கோபி கேட்டபோது மோட்டார் சைக்கிள் ரேஸில் 10 கிமீ தூரத்தைக்கடந்து யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்குப் பரிசு தந்து கொண்டாடினோம் என்றார் ஒருவர்.  உடனே கோபி அதனைக்கண்டித்து பொது இடங்களில் வேகமாக ஓட்டுவது தவறு. அதிலும் கொண்டாட்ட நேரத்தில் பலரும் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவார்கள்  குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதும் தவறு இனியாவது இது போன்ற பொது இடங்களில் இப்படிப்பட்ட போட்டிகளை நடத்தாதீர்கள் என்று அவர்களைத் திருத்தியது அவரது பொறுப்புணர்ச்சியைக் காட்டுகிறது.                                                   பாராட்டப் பட வேண்டிய நிகழ்வு.


சொல்லுவதெல்லாம் உண்மை  
வாய்மையே வெல்லம்



பொங்கல் அன்று கிட்ட தட்ட எல்லா சேனல்களிலும் ஏதோ ஒரு தலைப்பில் பட்டிமன்றம் ஓளிபரப்பினார்கள். நல்ல வேளையாக வெவ்வேறு நேரங்களில் அவற்றை இடம்பெறச் செய்ததால் பட்டி மன்ற ரசிகர்கள் எல்லா பட்டிமன்றங் களையும் பார்த்திருப்பார்கள். வசந்த் தொலைக்காட்சியில் ‘வாய்மையே வெல்லும்’ நிகழ்ச்சியும் ஸீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியும் ஒரே நேரத்தில் இடம்பெறுகின்றன. அதனால் இரண்டு நிகழ்ச்சிகளையும் பார்க்க நினைப்பவர்கள் ஏதாவது ஒன்றைத்தான் பார்க்க முடியும். இவற்றை வெவ்வேறு நேரங்களுக்கு மாற்றக்கூடாதா?’


 .சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘’தெய்வமகள்’’ நெடுந்தொடரில் பிரகாசின் அண்ணி காயத்ரி விடுதலைப் போராட்டத் தியாகியான தன் மாமானாரிடம் தன் ஜாக்கட்டிற்கு ஹூக் தைக்கச் சொல்கிறார். அவரது மனைவி அந்த வேலையைச் செய்கிறேன் என்று சொல்ல ‘இல்லை இல்லை இதை அவர்தான் செய்ய வேண்டும்’ என்று சொல்லிய காயத்ரி தன் மாமியாரிடம் தனக்கு கால் அமுக்கிவிடச் சொல்கிறார் அவரும் வேறு வழி இல்லாமல் காலை அமுக்கி விடுகிறாராம். மாமியார் மாமனாரைக் கொடுமைப் படுத்துவதாக காண்பிப்பதே தவறு என்றால் மருமகளுக்கு மாமியார் கால் அமுக்கிவிடும் கொடுமையை எல்லாம் காட்டத்தான் வேண்டுமா?  இது இயக்குனரின் குரூர புத்தியைத் தான் காட்டுகிறது இனியாவது இது போன்ற காட்சிகளைத் தவிர்ப்பார்களா?

அதே தொடரின் இன்னொரு எபிசோடில் கணவன் பிரகாஷ் கோபித்துக் கொண்டதால் சத்யா தாய்வீட்டுக்கு வர சத்யாவின் தாய் ‘’ ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆன பிறகு எந்த விஷயமானாலும் கணவனுக்குத் தெரிவித்து கணவனின் அனுமதியோடுதான் செய்ய வேண்டும். இதை கணவன் எதிர் பார்ப்பதில் தவறில்லை. அதனால் அந்த எதிர்பார்ப்பின் படி எதையும் கணவனிடம் சொல்லி கணவனின் அனுமதியோடு செய்து அவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும்.’’ என்று அறிவுரை சொல்லி சத்யாவை சமாதானப் படுத்தும் இடம் அருமை. இது போன்ற காட்சியை இடம் பெறச் செய்த இயக்குனரைப் பாராட்டத் தான் வேண்டும்.


பொங்கல் நாளில் எல்லா சேனல்களிலும் ஏதோ ஒரு விதத்தில் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பிக்கொண்டிருந்த நேரத்தில் தந்தி தொலைக்காட்சியில் பொங்கல் பண்டிகை மலேசியா, ஆஸ்திரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் எப்படி வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப் படுகிறது என்று படக்காட்சிகளோடு காண்பித்தது அருமையாக இருந்தது.
 


 ‘’சொல்லுங்க அண்ணே சொல்லுங்க’’ நிகழ்ச்சியில்  ஐம் பெருங்காப்பியங்கள் எவை? ஐவகை நிலங்கள் எவை? என்ற கேள்விகளுக்கு கல்லூரி மாணவ மாணவியர் பதில் தெரியவில்லை என்று சொல்லாமல் வித விதமாக வித்தியாசமாக பதில் சொல்வது பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் இதைப் போன்ற மிக எளிய கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாத நிலையில் இன்றைய இளைய தலைமுறையினர் இருக்கிறார்களே என்ற வருத்தம் தான் மிஞ்சுகிறது. 


மாற்றுத்திறனாளிகளுக்கான “’சேம்பியன்’ நிகழ்ச்சிக்கு சிறப்பு விரந்தினராக வந்திருந்த நடிகை பூஜா போட்டியாளர்கள் சிறப்பாக தங்கள் திறமைகளைக் காண்பித்த போது மிகவும் நெகிழ்ந்து போய் சிலருக்கு முத்தம் கொடுத்தது, சிலரைக் கட்டிப்பிடுத்து பாராட்டி ஊக்கப் படுத்தியது பாராட்டும் படி இருந்தது. அபிநயா என்ற காது கேளாத வாய் பேசமுடியாத சிறு பெண் மிக அழகாக அருமையாக நடனமாடியதைப் பாராட்டி தன் காதில் போட்டிருந்த தோடை கழட்டி அப்பெண்ணுக்குப் போட்டுவிட்டது நிகழ்ச்சியின் ஹை லைட்.  


திங்கள், 13 ஜனவரி, 2014

சின்னத்திரையையும் விட்டு வைக்காத சென்டிமெண்ட்

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்




விளம்பர இடைவேளை இல்லாமல் ஒரு சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்  என்ற அறிவிப்போடு நாதஸ்வரம் நெடுந்தொடர் அடிக்கடி ஒளிபரப்பப்படுகிறது. ரசிகர்களுக்கு ஏதோ பெரிய நண்மை செய்துவிட்டது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். விளம்பர இடைவேளை இல்லை என்றால் எல்லா விளம்பரங்களையும் சேர்த்து அத்தொடரின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ காண்பிக்கப் போகிறார்கள் என்றுதானே அர்த்தம். உண்மையில் அப்படி விளம்பரம் இல்லாமல் தொடர் ஒளிபரப்பப்படும் ஒரு நிலை வந்தால் சந்தோஷம்தான். பண்டிகை காலங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளின் விவரங்களை (விளம்பரதாரர்களின் பெயர்களையும் சேர்த்து)  ஒளிபரப்பி அந்த விளம்பர நேரத்தைக் கூட்டாமல் இருந்தால் போதாதா

ரிஷிமூலம் என்ற நிகழ்ச்சியில் ‘’திரையுலகின் பொற்காலம் அன்றா இன்றா’’  என்ற நிகழ்ச்சி புதுயுகம் தொலைக் காட்சியில் புத்தாண்டுஅன்றும் தொடர்ந்தது. கன்னட நடிகர் அம்ரீஷ்,, தெலுங்கு நடிகர் ராஜசேகர், மலையாள நடிகர் ஜெயராமன், உலகநாயகன் கமல்ஹாசன் என பல பிரபல நடிகர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களிடமும் கருத்துக்கேட்டது நிகழ்ச்சிக்கு சுவை கூட்டியது. ‘’பொற்காலம் அன்றா இன்றா’’ என்று பதில் சொல்லாது வருங்காலம்தான் பொற்காலம் என்று சொல்லி முடித்தார். நிகழ்ச்சியின் இடையே விளம்பர இடைவேளை என்று நேரம் ஒதுக்கினாலும் அவர்களது டீவியின் நிகழ்ச்சி பற்றிய ஒரேஒரு அறிவிப்போடு நிகழ்ச்சி தொடர்ந்தது ஒரு ஆறுதல். இவர்களுக்கும் விளம்பரம் வரும் வரை விளம்பர தொந்தரவு இல்லாமல் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவந்த தேன்நிலவு தொடர் முடிவுக்கு வந்தது. எல்லா கதைகளிலும் வில்லன், வில்லி திருந்தி நல்லவர்களாக ஆகவேண்டும் என்ற விதிகளின்படி அகல்யாவும், வில்லனும் திருந்திவிடுவதாகக் காண்பிக்கிறார்கள். எல்லோரையும் விடுபட்டுப்போன தேனிலவைக் கொண்டாட எல்லோரையும் கொடைக்கானலுக்கு அவர் செலவிலேயே அழைத்துச் செல்கிறேன் என்று டெல்லிகணேஷ் சொல்கிறாராம்.  இனியாவது அவரவர் குடும்பத்தோடு தனியாக சென்று குழப்பமில்லாமல் தேனிலவு கொண்டாடி வரட்டும்.

தேனிலவைத் தயாரித்த திருபிக்சர்ஸ் அடுத்ததாக மாதம் ஒரு கதையாக ஒளிபரப்பப் போகிறார்களாம்.  இதையாவது ஜவ்வு போல இழுக்காமல் திரைக்கதை அமைப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.   திருமுருகனுக்கு மெட்டி ஒலியில் நடனமாடிய சாந்தி தலைப்புப் பாடலுக்கு நடனம் ஆடினால்தான் தொடர் வெற்றி பெரும் என்ற சென்டிமென்ட் போலிருக்கிறது.தேனிலவிலும் அவரையே நடனமாட வைத்திருந்தார் இதிலும் கதை ஒண்ணு சொல்லப் போறோம் என்ற பாடலுக்கு அவரையே நடனமாட வைத்திருக்கிறார். சில நாட்களே ஒளிபரப்பாகப் போகும் தலைப்புப் பாடலில் என்ன இருக்கிறது திரைக்கதையும் காட்சிகளும் நன்றாக இருப்பதுதானே ரசிகர்களுக்கு முக்கியம் .
 


திருச்சியில் சிறந்த பேச்சாளர்களான திரு நமச்சிவாயம், திரு சொ . சத்தியசீல\ன், திரு. அறிவொளி போன்றவர்களுக்கு பாராட்டுக்கூட்டம் நடைபெற்றதாகவும், அவர்களுக்கு பொற்கிழி பரிசாகக் கொடுக்கப் பட்டதாகவும் திரு சுகி சிவம் அவர்கள் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சியில் கூறினார். பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள்தான் பொற்கிழியை வழங்கினாராம். இவரது கை மேலேயும் அவர்களது கைகள் கீழேயும் இருக்கக் கூடாது என எண்ணி பரிசைத் தன் கைகளில் வைத்துக் கொண்டு அறிஞர் பெருமக்களை எடுத்துக் கொள்ளச் சொன்னாராம்.-  இவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். பாராட்டியவர்களுக்கு நன்றி.

புதன், 1 ஜனவரி, 2014

சரியான முழு பதில் சொல்லவேண்டாமா?

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


 என்ற நிகழ்ச்சியில் ‘’திரையுலகின் பொற்காலம் அன்றா இன்றா’’  என்ற நிகழ்ச்சி புதுயுகம் தொலைக் காட்சியில் புத்தாண்டு பிறப்பதற்கு முன் ரிஷிமூலம் இடம்பெற்றது. அதில் நடிகர்கள் ராஜேஷ், கணேஷ், நடிகைகள் கௌதமி, சுஹாசினி, அருணா, நித்யா ரவீந்திரன், இயக்குனர் கம் நடிகர்கள் மனோபாலா, ரமேஷ் கண்ணா, மதன் கார்க்கி இயக்குனர்கள் பிரசன்னா, லக்ஷ்மி, ஸ்ரீப்ரியா, ஸ்டில் ரவி, போன்ற திரைப்படத்துறையின் பலரும் கலந்து கொண்டு தம்தம் பங்கிற்கு கருத்துக்களைச் சொன்னார்கள்.   அன்று 4 மெலொடி 1 குத்துப் பாட்டு என்று இருந்தது இன்றோ 1 மெலொடி 4 குத்துப் பாட்டு என்று நிலை மாறியுள்ளது என்று குறிப்பிடப்பட்டது. எத்தனைப் பாடல்கள் இன்று நினைவில் நிற்கின்றன? இன்றைய தலைமுறைக்கு கிடைத்துள்ள வாய்ப்பு அபாரமானது. இதை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் சொன்னார்கள்.  விமர்சகர்கள் சிலரையாவது அழைத்திருக்கலாமே. பல சுவையான சம்பவங்களைக் கேட்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்தது மட்டுமே லாபம். 
 சீரியல்களில் சில பல காரணங்களால் நடிகரோ அல்லது நடிகையோ தொடர முடியாமல் போகும் போது இவருக்குப் பதில் இவர் என்று அறிவித்து நடிக நடிகையரை மாற்றுவது பழக்கத்தில் உள்ளது.   ஆனால் இப்போதோ சில தொடர்களில் இயக்குனர்களையே மாற்றிவிடுகிறார்கள்.  இதைப் பற்றி எந்த அறிவிப்பும் செய்யப்படுவதில்லை. ஒரு தொடருக்கு இயக்குனர்தானே முக்கியமானவர். அப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் மாறும் போது முறையாக அறிவிக்க முயற்சி செய்வார்களா?
சன் தொலைக்காட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நியழ்ச்சியில் இந்தியாவில் ‘’முதன் முதலாக எந்த இடத்திலிருந்து எந்த இடத்திற்கு ரயில் விடப்பட்டது’’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. பலர் பலவிதமான பதில்களைச் சொன்னாலும் ஒரே ஒரு பெண் மட்டும் ‘’1853 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி பம்பாயிலிருந்து முதல் ரயில் விடப்பட்டது’’ என்று மிகச் சரியாக பதில் சொன்னார். பம்பாயிலிருந்து என்ற பதில் சரிதான். பம்பாயிலிருந்து தானே வரை முதல் ரயில் விடப்பட்டது என்று சொல்லியிருக்க வேண்டும். சொன்ன பதில் பாதிதான் சரிஎன்றாலும் அதைச் சரி என்று கூறி விட்டுவிடுவதா? முழு பதிலையும் சொல்ல வேண்டாமா? அந்த சரியான விடையை சப் டைட்டில் போல எழுத்துவடிவத்தில் காட்டினால் பார்ப்பவர்களுக்கு சரியான விடையைத் தெரிந்து கொள்ள உதவுமே செய்வார்களா?