ஞாயிறு, 27 அக்டோபர், 2013

இந்த நாள் இனிய நாளுக்கும் அமுதமொழிகளுக்கு நேர்ந்த கதிதானா?









சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அழகி நெடுந்தொடரில் பாத்திரங்கள் வசனம் பேசாத நேரங்களில் பின்னணி இசையைப் போடுகிறார்கள். வசனத்தின் ஒலியைவிட பின்னணி இசையின் சத்தம் மிக அதிகமாக உள்ளது. அந்த பின்னணி இசை பார்ப்பவர்களின் காதுகளை பாதிக்கிறது. இது ஏதோ ஒரு சில எபிசோட்களில்தான் அப்படி இருக்கிறது என்று பார்த்தால் எல்லா நாட்களுமே அப்படி காதுகளை பாதிக்கும்படிதான் இருக்கிறது.  அந்த தொடர் தயாரிப்பாளர்கள் இதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாமா?

ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஒளிபரப்பாகும் சாலமன் பாப்பையாவின் அமுத மொழிகள் புதிதாக ஏதும் பதிவு செய்யப்படவில்லை போலிருக்கிறது. ஒளிபரப்பியதையே ஒளிபரப்பி போரடிக்கிறார்கள். நாய் வால் எழுத்தாணி ஆகாது, கூட்டி பெருக்கி சுத்தப் படுத்தினாலும் சுடுகாடு வீடாகாது தாய் பேச்சைக் கேட்காத மகன் தானும் எதையும் கொடுக்கமாட்டான் பிறரையும் கொடுக்க விடமாட்டான் என்ற விவேகசிந்தாமணியின் கருத்தையும், குருவின் உபதேசம், மனைவியிடம் பேசிய அந்தரங்கம், போன்றவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது என்ற விவேகசிந்தாமணியின் கருத்தையும் திரும்பத்திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அநிகாலை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை யார் பார்த்து கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்று சன்தொலைக் காட்சியினர் நினைகிறார்களோ?’

நாதஸ்வரக் கலைஞர் நாகப்பட்டினம் வேணுகோபால் பிள்ளை அவர்களிடம் தவில் வாசித்து வந்த நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம்  அவர்கள் யாராவது எங்காவது ‘நாகப்பட்டனம்’ என்று ஊர் பெயரைச் சொன்னால் அவர் எழுந்து வணங்கிவிட்டு உட்காருவாராம். தன் குருவிடம் அவர் கொண்டிருந்த மரியாதையைப்பற்றி சுகிசிவம் அவர்கள் கூறிய விவரத்தை மீண்டும் இன்று இந்த நாள் இனியநாள் பகுதியில் ஒளிபரப்பினார்கள். போகிற போக்கைப் பார்த்தால் சுகிசிவம் அவர்களின் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சிக்கும் அமுதமொழிகள் நிகழ்ச்சிக்கு ஏற்பட்ட அதே கதிதான் ஏற்படும் போல் இருக்கிறது. சன் தொலைக்காட்சியும் மறுஒளிபரப்பு தொலைக்காட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது போல தெரிகிறது..  




செவ்வாய், 15 அக்டோபர், 2013

lதொடர்கள் சனிக்கிழமைகளிலும் ஒளிபரப்பப் படுவதால் யாருக்கு நன்மை அதிகம்?


சன்தொலைக்காட்சியில் இதுவரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வந்த மெகாதொடர்களில் பெரும்பாலனவை சனிக்கிழமை களிலும் ஒளிபரப்பப்படுகின்றன. அதாவது மாலை 6.30 மணிமுதல் 9.00 மணி வரை ஒளிபரப்பப்படும் தொடர்கள் மட்டும் சனிக்கிழமைகளுக்கும் நீட்டிக்கப் பட்டுள்ளன. அதனால் இது ரொம்ப நாள் நீடிக்காது. உடனே சந்தோஷப் படாதீர்கள். சனிக்கிழமைகளில் 9.00 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு வேறு நேரங்களை ஒதுக்கிவிட்டு 9.00 மணிக்கு மேல் ஒளிபரப்பப்படும் தொடர்களையும் நீட்டித்துவிடுவார்கள் ஏனென்றால் அவற்றில் ராதிகா தொடரும் விகடன் தொடர்களும் உள்ளனவே..

இந்த தொடர்களைப்பார்த்து இவற்றிற்கு அடிக்ட் ஆகிவிட்டவர்களுக்கு இது நற்செய்தியாக இருக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு சனி ஞாயிறுகளில் போர் அடிப்பது போல உணர்ந்து வந்தவர்கள்.   இத்தொடர்களால் குடும்ப உறுப்பினர்களோடு பேசக்கூட நேரம் கிடைப்பதில்லை, மனைவிமார்கள் கணவனையும், குழந்தைகளையும் அத்தொடர் நேரங்களில் சரியாக கவனிப்பதில்லை என்று வருத்தப் பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு இவ்வேதனை மேலும் ஒரு நாள் கூடுவதால் அவர்கள் இந்த நீட்டிப்பை வரவேற்க மாட்டார்கள். எது எப்படியோ தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விளம்பர வருமாணம் கூடுவதால் அவர்களுக்கு சந்தோஷமாகவே இருக்கும்.

இத்தொடர்களை ஜவ்வாக இழுத்து பல மாதங்கள் வருடங்கள் என நீட்டித்துக் கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு ஒவ்வொரு வாரமும் மேலும் ஒரு நாளைக்கு கதை பண்ணவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. எனவே அவர்கள் எப்படி எப்படியெல்லாம் ஐடியா செய்து தொடர் பார்ப்பவர்களை இன்னும் கஷ்டப்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.    

விஷேச நாட்களில் எல்லா தொலைக்காட்சி களிலும் ஒளிபர்ப்பப்படும் சிறப்பு  நிகழ்ச்சிகள் அனத்திலும் ஒரே மாதிரியே உள்ளன. எதிலும் புதுமைஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக வரஇருக்கும் திரைப்படங்களின் விளம்பர முன்னோட்டங்களாக பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிகளாக  நடிக நடிகையரின் ஏனோதானோ பேட்டிகளாகவே உள்ளன. அவரவர் தொலைக்காட்சியில் எது ஃபேமஸ் என்று அவர்கள் நினைக்கிறார்களோ அதன் சிறப்பு நிகழ்ச்சி என்றும், முன்பே ஒளிபரப்பான திரைப்படங்களை சிறப்புத் திரைப்படங்கள் என்றும் போரடித்துவிடுகிறார்கள். தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வத்தையே குறைத்துவிடுவார்கள் போலிருக்கிறது





திங்கள், 7 அக்டோபர், 2013

இந்த நாள் இனிய நாள் ஆகுமா?


இந்த நாள்

இனிய நாள்

ஆகுமா?


இந்த நாள் இனிய நாள் என்ற தலைப்பில் சனி ஞாயிறுகளில் சுகிசிவம் சன் தொலைக்காட்சியில் பேசி வருகிறார். தமிழகத்தில் தூங்க வைப்பதற்கு தாலாட்டு காலையில் எழுப்புவதற்கு திருப்பள்ளி எழுச்சி, இறந்தால் ஒப்பாரி என்று எல்லாவற்றிற்கும் பாட்டு உண்டு. பாடப்பட்ட பாடலை வைத்து அது எந்த நேரத்தில் பாடப்பட்டது என்று சொல்லிவிட முடியும்..இப்படிப்பட்ட பாடல்கள் இன்று மேடைக்கச்சேரிகளாக மாறிவிட்டன. பங்கு பெறவேண்டிய மக்கள் இன்று பார்வையாளர்களாக உள்ளனர். என்று பல குறிப்புகளைச் சொன்னார் pசுகிசிவம். ஆனால் இது ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு.
எந்தக் கருத்தையும் துணிந்து சொல்லக்கூடியவர்.சுகிசிவம். அவரது பேச்சைக் கேட்பவர்கள் சிறிதளவாவது அவர் பேசும் பிரச்சினை பற்றி யோசிப்பார்கள். இப்பகுதியை மறுஒளிபர்ப்பு செய்து அப்படிப்பட்டவரின் நேரத்தையும் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் நேரத்தையும் வீணடிப்பது எந்த விதத்தில் நியாயம்? வாரத்தில் இரண்டு நாட்களே ஒளிபரப்பாகும் ‘இந்த நாள் இனிய நாள்’’ பகுதியைக்கூட புதிதாக ஒளிபர்ப்ப முடியாதா? நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் இதுபற்றி யோசிப்பார்களா?  சுகிசிவத்தின் பேச்சை எதிர் பார்த்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு காலையிலேயே மறு ஒளிபரப்பைப் பார்த்தால் அந்த நாள் எப்படி இனிய நாள் ஆகும்??  



ஒரு வழியாக ஒரு மெகாத்தொடர் ‘உதிரிப்பூக்கள்’ முடித்து வைக்கப்பட்டது. இறந்து போன கதாநாயகி சக்கியும் இறந்து போன சக்தியின் தாயும் உயிரோடு இருக்கிறார்கள் என்று அவர்களை உயிரோடு கொண்டு வந்து நிறுத்தியதால் ஏதேதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் உப்புச்சப் பில்லாமல் ஏனோதானோ என்று எல்லாரும் திருந்திவிட்டார்கள் என்று தொடரை முடித்து விட்டார்கள்.
தொடரை எப்படியெல்லாம் நீட்டமுடியும் என்பதை இவ்வளவு வாரங்கள் பார்த்து வந்தவர்கள் கடைசி ஒரு வார காட்சிகளைப் பார்த்தால் தொடர் தயாரிப்பாளர்கள் நினைத்தால் ஒரு தொடரை எப்படி சீக்கிரம் முடிக்க முடியும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.. மூன்று வில்லன்கள் ஒரே இடத்தில் இருந்தும் சிவநேசன் பேச்சைக் கேட்டு மனம் திருந்தி விடுகிறார்களாம். நிலா, நிலாவின் அப்பா, சக்தியின் மாமியார், சக்தியின் நாத்தனார்கள் எல்லோரும் திருந்திவிடுகிறார்களாம். எப்படியோ ஒருவழியாக தொடரை முடித்தார்களே என்று சந்தோஷப்படலாம்.    




வியாழன், 19 செப்டம்பர், 2013

இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் தொடர் இயக்குனர்கள்.



Ø  உதிரிப்பூக்கள் தொலைக்கட்சித் தொடரில் இறந்ததாகக் காட்டப்பட்ட கதாநாயகியும், கதாநாயகியின் அம்மாவும் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று கதையை நகர்த்துகிறார்கள் என்று பார்த்தால் இதற்கு போட்டியாக முந்தானை முடிச்சு தொடரில் இறந்த- இல்லை இல்லை - கொலை செய்யப்பட்ட சதீஷ் பாத்திரத்திற்கு திடீரென உயிர் கொடுத்திருக்கிறார்கள். இறந்த சதீஷ்னுடைய  தம்பி அவனைப்போலவே இருக்கிறான் இருவரும் இரட்டைப் பிறவி (ட்வின்ஸ்) என்றும் சதீஷினுடைய தம்பியை சதீஷ் போல நடிக்க வைக்க  திட்டமிடுகிறாளாம் வில்லி பிரேமா. எப்படியோ இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் பிரம்மாக்களாக மாறி இருக்கிறார்கள் தொடர் இயக்குனர்கள். கதையை நீட்டிக்க எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் வர்கள். 


Ø  யாரிடமாவது  அவர்கள்  குடியிருக்கும் வீட்டைக் காலிசெய்யச் சொன்னால் ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ டயம் தாருங்கள் வேறு வீடு பார்த்துக்கொண்டு போய்விடுகிறோம் என்றுதான் சொல்வார்கள்..  ஆனால் தொடர்களில் மட்டும் வேறு விதமாகத்தான் நடக்கும்.  யாரையும் குடும்பத்தோடு வெளியே போய்விடுங்கள் என்று சொன்னால் அவர்கள் எல்லோரும் (பெரியவர்கள் சிறியவர்கள் வித்தியாசமில்லாமல்) வீட்டைவிட்டு வெளியே போய் ரோட்டில் இறங்கி நடக்கத் தொடங்கிவிடுவார்கள்.. அடுத்த வேளைக்கு எங்கு போவோம் எப்படி இருப்போம் என்று எதையும் யோசிக்க மாட்டார்கள் (அவ்வளவு ரோசம் மானம் உள்ளவர்கள்.)  யாரும் உதவ முன் வந்தாலும் அதை ஏற்கவும் அவர்களுக்கு தன்மானம் இடம் கொடுக்காது –- உதாரணம் தெய்வமகள் மற்றும் வாணி ராணி இரண்டு தொடர்களிலுமே அப்படித்தான் (அதுவும் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள்) கதையில் சுவாரஸயமும் கதாபாத்திரங்கள் மேல் அனுதாபமும் ஏற்பட வேண்டும் என்பதற்காக எதார்த்தத்தைப்பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இப்படியா திரைக்கதை அமைப்பார்கள்?  

புதன், 11 செப்டம்பர், 2013

இறந்து போன கதாநயாயகியின் தாயும் உயிரோடிருக்கிறாராம்





·       நெடுந்தொடர்களில் கதாநாயகன் அல்லது கதாநாயகியையே இறந்ததாகக் காட்டுகிறார்களே இதை எப்படி நம்புவது? என்று கேட்டு எழுதியிருந்தேன்.   உதிரிப்பூக்கள் தொடரில் கதாநாயகி சக்தி பாண்டிச்சேரியில் உயிரோடு இருப்பதாகவும் இது அவர்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியாது என்றும் கதையை நகர்த்திக் கொண்டிருந்தார்கள். இப்போதோ திடீரென்று இதற்கும் முன்பே இறந்து போனதாகக் காட்டிய சக்தியின் அம்மா உயிரோடு இருப்பதாகவும் சக்தி தன் அம்மாவைப் சந்திப்பது போலவம் காட்டுகிறார்கள்.  கதாநாயகனோ கதாநாயகியோ அல்லது முக்கிய பாத்திரமோ இறந்து போனால் கதை சீக்கிரமே முடிந்து போய்விடுமே!  அப்புறம் அது நெடுந்தொடர் ஆகாதே! எனவே இவர்களை இறந்து போக விடமாட்டார்கள் என்று டீவி பார்ப்பவர்களுக்குத் தெரியாதா? ஏன் இப்படி இறந்து போனதாகக் காண்பிப்பதும் பின்னர் உயிரோடு இருப்பதாக்க் காட்டுவதையும் தொடர் இயக்குனர்கள் எப்போதுதான் விடப்போகிறார்களோ?


·       .பிள்ளைநிலா தொடரில் நிலா போலிசுக்குத் தெரியாமல் மறைந்து வாழும் தன் தந்தையை மற்றவர்களுக்குத் தெரியாமல் தன் வீட்டில் ஒளிய வைத்துக் கொண்டிருப்பதாகவும் அதை மற்றவர்கள் யாருமே கண்டுபிடிக்கவில்லை என்றும் தொடர் பார்ப்பவர்கள் காதுகளில் பூச் சுற்றுகிறார்கள். சரி கதைதானே விட்டுவிடலாம் என்று பார்த்தால் இப்போதோ அவர் சமையலறைக்குப் போய் தானே தோசை சுட்டு, மற்றவற்றை செய்து  சாப்பிடுவதாக்க் காட்டுகிறார்கள். மறைந்திருக்கும் அவர் கதவை கொஞ்சம் திறந்து வீட்டிலுள்ளவர்களைப் பார்ப்பது போலவும் அவர்கள் இவரைப் பார்க்காதது போலவும் காட்டுகிறார்கள். என்னதான் தீயசக்தி வீட்டில் நடமாடுவதாக வீட்டிலுள்ளவர்கள் பயந்து போய் இருப்பதாக சொன்னாலும் போலிஞுக்குப் பயந்து ஒளிந்து இருப்பவர் எந்த பயமும் இன்றி இப்படித்தான் நடந்து கொள்வாரா? 



·       மற்ற தொலைக்காட்சிகள் எல்லாம் விநாயக சதுர்த்திக்காக ஸ்பெசல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்க கலைஞர் டீவியில் மட்டும் ‘’விடுமுறைதின’’  சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபர்ப்பிக் கொண்டிருந்தார்கள்.  இவர்களுக்கு விநாயக சதுர்த்தியில  நம்கிக்கை இல்லையென்றால் அது தவறில்லை. சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தாமல் விட்டுவிட வேண்டியதுதானே. (வருமாணத்தை விட்டுவிடக்கூடாது என்பதால்தானே சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள்) விநாயகர்தினத்தன்று ஒளிபரப்பப்பட்டவை விடுமுறைதின சிறப்பு நிகழ்ச்சிகள் என்றால் மற்ற விடுமுறை நாட்களிலும் இப்படி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபர்ப்புவார்களா? 

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

உலக பதிவர் திருவிழா.2013 க்கு வருகைதரும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்






இரண்டாம் ஆண்டு  உலக பதிவர் திருவிழா.2013 க்கு வருகைதரும் அனைத்து பதிவர்களையும் வருக வருக என்று வரவேற்கிறேன்.  





இந்த நான் இனிதே அமையவும் விழா சிறப்பாக நடைபெறவும் 
வாழ்த்துகிறேன்

சனி, 31 ஆகஸ்ட், 2013

ஆஹா என்ன ருசி!



# ‘’தமிழ் சினிமா கிளப்’’ சேனலில் தமிழ் திரைப்படங்களை ஒளிபரப்பும் போது அத்திரைப்படத்தின் பெயரை வலது பக்க மேல் மூலையில் காண்பிக்கிறார்கள். அதனால் எந்த நேரத்தில் அந்தச் சேனலைப் பார்த்தாலும் அபோது என்ன திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ள வசதியாக இருக்கிறது.  மற்ற சேனல்களிலும் இது போல ஒளிபரப்பப்படும் திரைப்படத்தின் பெயரைக் காண்பித்தால் பார்ப்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்குமே – செய்வார்களா?!


 # சன்தொலைக்காட்சியில் ‘’ஆஹா என்ன ருசி’’ என்ற சமையல் நிகழ்ச்சியை ஒளிபர்ப்பி வருகிறார்கள், அந்நிகழ்ச்சியை செஃப் ஜேக்கப் தயாரித்து வந்தார். அவர் இறந்து சில மாதங்களாகி விட்டன. அவர் இறந்த பிறகும் அந்நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபர்ப்பாகி வருகிறது. ஜேக்கப் சமைக்கும் சில காட்சிகளும் அதில் இடம் பெறுகின்றன. ஒருவர் இறந்த பிறகும் நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாவது ஆச்சர்யமாக உள்ளது.(அவ்வளவு காட்சிகள் தயார் செய்து வைத்துள்ளாரா?)

#சிறுவர் சிறுமிகளுக்கான சன் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் சிறுமி ரேணுகா ‘’மல்லிகை முல்லை மலர்ப்பந்தல் பச்சை வாழை தோரணங்கள் எல்லாம் எதுக்காக?’’’ என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார்.உடனே கங்கை அமரன் அனுராதா ரமணன் புஷ்பவனம் குப்புசாமி மூவரும் அந்தப் பெண்ணின் அருகே சென்று பாடலை நிறுத்தச் சொல்லி சரியா இல்லையே உனக்கு ‘’கம்ஃபர்டபிலா இருக்கா?’ ’என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்ப பாடவேண்டிய பாடலே வேறே ஹேப்பி பர்த்டே இல்லே பாடணும் என்று சொல்லி கேக் வெட்டி பாடிய சிறுமிக்கு பர்த் டே கொண்டாடினார்கள். அதை முடித்து அப்பாடலைப் பாடச் சொன்னார்கள்.  பாட்டைப் பாடியதில் குறை ஏதுமில்லாமல் பாடலை இடைமறித்து இப்படி பயமுறுத்தி பர்த் டே கொண்டாட வேண்டுமா?  அச்சிறுமி பாட வந்ததுமே பிறந்த நாள் கொண்டாடிவிட்டு பிறகு பாடச் சொல்லி இருக்கலாமே!  இந்த நாடகம் அந்த மேடையில். தேவைதானா?